அரசுக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைக்க முயன்ற மக்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சன்னதி புதுக்குளம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு காலனி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தற்போது இடியும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தில் பண்ணை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதனை அடுத்து அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் முட்புதர்களை வெட்டி அகற்றி அதில் குடிசை போடுவதற்காக காலனி மக்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அரசு நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு அதிகாரிகள் உங்களுக்கு புதிதாக வீடு வேண்டும் என்றால் அரசிடம் வேண்டுகோள் விடுக்குமாறும், இவ்வாறு அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் அவர்களை கண்டித்துள்ளனர்.