கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், உணவகங்கள் மற்றும் கடைகளில் பார்சல் சேவையின்போது உறைகளை பயன்படுத்த வேண்டும் என மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நோய்ப் பரவயைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகப் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் சில செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் சில செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளில் ஒன்றாக அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது.
உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகை கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில் அந்த கடையில் உணவுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. உணவுகளை பார்சல் செய்யும்போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு அந்த உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவக்கும் என்பதால் இதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என கருதப்படுகிறது.
சமீபத்தில் இது தொடர்பான ஒரு பொது நல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும்போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கொரோணா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்பது குறித்து கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெற்றி பெற பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்பது மறுக்க முடியாத கூற்றாகும்.