இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதனால் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் நடைபெற உள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு 1/2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று அறிவித்துள்ளது. முன்கள பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.