கால்வாயில் தண்ணீர் வந்ததால் பயத்தில் பரிதவித்த ஏழு பசுமாடுகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 16ஆம் தேதி கல்லணையை வந்து சேர்ந்தது. அதன்பின் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பாய்ந்து சென்று தஞ்சை மாவட்டத்திற்குள் நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் எம்.கே.மூப்பனார் சாலை அருகில் கல்லணை கால்வாய் பகுதியில் 7 பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பசுமாடுகள் நின்ற இடத்தை தண்ணீர் கடந்து சென்றதால் அவை அனைத்தும் பயத்தில் பரிதவித்து கத்தத் தொடங்கியது. இதனை கண்டதும் சிலர் பசு மாடுகளின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீர் அதிகமாக வருவதற்கு முன்பாக பசுமாடுகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இவற்றில் நான்கு பசு மாடுகளை ஜி.ஏ.கெனால் சாலையில் உள்ள விநாயகர் கோவில் பின்புறம் இருக்கும் படிக்கட்டுகளின் வழியாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் எஞ்சிய 3 மாடுகளை கரைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக அதிக அளவு தண்ணீர் வந்ததால் இர்வீன் பாலத்தின் அருகிலுள்ள பாதை வழியாக அவைகளை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து பொது மக்களின் முயற்சியால் அனைத்தும் மாடுகளும் தண்ணீர் அதிக அளவு வருவதற்கு முன்பாக மீட்கப்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் நேரவில்லை.