ரயிலில் அடிபட்டு இரண்டு மயில்கள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அய்யலூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மயில்களின் உடலை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் சென்னையிலிருந்து மதுரை சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் மயில்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கால்நடை மருத்துவர் இரண்டு மயில்களின் உடலையும் பிரேத பரிசோதனை செய்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்தது ஒரு ஆண் மயில் மற்றும் ஒரு பெண் மயில் என்று தெரிவித்துள்ளனர். அதன்பின் இரண்டு மயில்களின் உடலையும் வனத்துறையினர் வனப்பகுதியில் புதைத்து விட்டனர்.