தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் சுசீந்திரன் ரூ.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். ஜூன் 14 முதல் ஆன்லைனில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி, அதில் பங்கேற்றோர் வழங்கிய கட்டண தொகையை மொத்தமாக நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நிதிக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் அவர் வழங்கியுள்ளார்.