சுவிட்சர்லாந்தில் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் முன்னாள் லைபீரிய கிளர்ச்சிப்படை தளபதிக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
லைபீரியாவில் Ulimo என்ற கிளர்ச்சிப் படையில் இணைந்து பணியாற்றி வந்தவர் Alieu Kosiah ( 46 ). முன்னாள் லைபீரிய ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் என்பவருடைய NPFL என்ற முன்னணிக்கும், Ulimo கிளர்ச்சிப்படைக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நடைபெற்று வந்ததுடன் சுமார் 250,000 மக்கள் உள்நாட்டு போரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
கடந்த 2012-ல் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 1998-ல் புகலிடம் கோரி சுவிட்சர்லாந்துக்கு வந்த Alieu Kosiah-வின் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் அவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் லொசேன் என்ற பகுதியில் 16 ஆண்டுகளாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் Alieu Kosiah மீது Civitas Maxima என்ற அமைப்பு குற்றவியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் கைதான Alieu kosiah கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்துள்ளார். மேலும் அவர் மீது கொள்ளை, கொலை, சிறார்களை இராணுவத்திற்கு பணியாற்ற அனுப்பியது, கூட்டு துஷ்பிரயோகம், கிராம மக்களை அச்சுறுத்த இதயத்தை பச்சையாக தின்று சித்திரவதைக்கு உட்படுத்தியது, கிராம மக்களிடம் கொடூரமாக நடந்து கொண்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது குறித்து தகுந்த ஆதாரங்களை Civitas Maxima அமைப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததையடுத்து குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவரை நாட்டை விட்டு 15 ஆண்டுகள் வெளியேற்றவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நீதிமன்றத்திற்கு சர்வதேச குற்றவியல் வழக்கு ஒன்று வந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.