வீட்டில் தனித்திருந்த மூதாட்டியிடம் 26 பவுன் நகையை பறித்துகொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி தனியே வசித்து வருகிறார். இவருடைய மகன் அதே பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மூதாட்டி தனது வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஒருவன் மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். மேலும் மற்றொரு நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 26 பவுன் தங்க நகையை பறித்துள்ளார்.
பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதன்பின் மூதாட்டி சத்தம் போட அருகில் இருந்தவர்கள் வந்து விசாரித்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் மூதாட்டியிடம் இருந்த நகைகள் மீது ஆசைப்பட்டு அவருடைய பேரன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து நகைகளை பறித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தன்னுடைய பேரன்தான் நகையை திருடியது என்பதை அறிந்த மூதாட்டி தன்னுடைய நகைகள் பத்திரமாக வேறொரு இடத்தில் வைத்திருப்பதாகவும் அதனால் இந்த வழக்கை வாபஸ் வாங்குகிறேன் எனவும் காவல்துறையினரிடம் கூறி இருக்கிறார். ஆனாலும் காவல்துறையினர் மூதாட்டியின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் பிடித்து வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.