டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 5 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த செல்வி பவானி தேவி தமிழகத்தின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இவரின் ஊக்கத்தையும், விடா முயற்சியையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் ‘விளையாட்டு அலுவலர்’என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இவர் ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதோடு இவர் இந்தியா சார்பில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்வுசெய்யப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார் .தற்போது அவர் இத்தாலியில் ஒலிம்பிக் போட்டிக்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் பவானி தேவி சில பயிற்சிகளை பெறுவதற்கு தமிழ்நாடு அரசிடம் ரூபாய் 5 லட்சம் நிதியுதவி கோரியிருந்தார். இவரின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதலமைச்சர் திரு மு.க .ஸ்டாலின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவானி தேவியின் தாயாரிடம் ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக எம்.பி. தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.