துபாய் அரசு சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியா உட்பட மூன்று நாடுகளுக்கிடையே மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 15 மாதங்களாக தடை செய்திருந்த சர்வதேச விமான போக்குவரத்தை தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கிடையே வருகின்ற ஜூன் 23-ஆம் தேதி முதல் மீண்டும் சேவையை தொடங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் பயணிகள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழையும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் துபாய் அரசு PCR சோதனை உள்ளிட்ட ஆறு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஸ்பூட்னிக் வி, ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா, பைசர் பயோஎன்டெக், சினோபார்ம் ஆகிய நான்கு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை 2 டோஸ்கள் செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
துபாய் மற்றும் இந்தியா இடையே விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி என்பதால் துபாய்க்கு செல்லவிருக்கும் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.