அமெரிக்காவில் பிறந்த குழந்தையின் முகத்தில் மருத்துவர்கள் 13 தையல் போட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் Reazjhana Williams எனும் பெண் கடந்த புதன்கிழமை அன்று தனது பிரசவத்திற்காக கொலராடோவில் உள்ள டென்வர் சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் தனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்று ஆசையுடன் இருந்துள்ளார். ஆனால் டென்வர் சுகாதார மைய மருத்துவர்கள் அவருக்கு விரைவில் பிரசவம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மாத்திரைகளை கொடுத்து அவசர அவசரமாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையின் இதயத்துடிப்பு சில நொடிகள் கேட்காமல் இருந்ததால் மருத்துவர்கள் அந்த அறுவை சிகிச்சையை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த பிஞ்சு குழந்தையின் முகத்தில் தெரியாமல் கத்தி கிழித்துள்ளது. இதன் காரணமாக முகத்தில் காயங்களுடன் பிறந்த அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் 13 தையல் போட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த குழந்தையின் முகத்தில் ஏற்பட்டுள்ள காயத்தை சரி செய்வதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அந்த குழந்தையின் தந்தை Damarqus Williams கூறும்போது, எதிர்காலத்தில் இந்த காயம் எவ்வாறு ஏற்பட்டது என்று அந்த குழந்தை கேள்வி கேட்டால் அதற்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.