சீனாவில் 13 வருடங்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஒன்றில் சிக்கி உயிர் தப்பிய பன்றி சமீபத்தில் உயிரிழந்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 90,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பெரும்பாலானோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் 36 நாட்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த பன்றி ஒன்றை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டு சிகிச்சை அளித்து அதனை உயிர்பிழைக்க செய்துள்ளனர். ஒரு வயதேயான அந்த பன்றி 36 நாட்கள் மிகப்பெரிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தண்ணீர் மற்றும் உணவு எதுவும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளதால் அது சீனாவின் ஒரு தேசிய ஐகானாக மாறியது.
மேலும் தன்னம்பிக்கை மற்றும் போராட்ட குணத்தின் சின்னமாக அந்தப் பன்றி பார்க்கப்பட்டதோடு, அதற்கு ஜு ஜியாங்கியாங் ( வலுவான மனஉறுதி கொண்டது ) என்ற பெயரும் இடப்பட்டது. இதையடுத்து அந்த பன்றியை ஜியாஞ்சுவானின் சிச்சுவான் அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஒரு சுற்றுலா அம்சமாக வைத்திருப்பதற்காக 3,008 யுவான் கொடுத்து அந்த பன்றியை வாங்கியுள்ளது.
இந்நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக தனது 14 வயதில் ஜு ஜியாங்கியாங் பன்றி உயிரிழந்ததாக அருங்காட்சியகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து சீன மக்கள் ஜு ஜியாங்கியாங் பன்றிக்கு சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் “Strong-willed pig has died” என்ற ஹஷ்டேக் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆனது. சீன மக்கள் பலரும் ஜு ஜியாங்கியாங் இறப்பிற்கு சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.