தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார்.
முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிதி நிறுவனங்களில் கடன்பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவு முத்திரைத் தீர்வையிலிருந்து டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில் நிறுவனங்களில் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில் வரி செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.