தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார்.
முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய பன்வாரிலால் புரோகித், தமிழக அரசு அலுவலகங்களில் பிற மாநிலத்தவர்கள் அதிகம் பணியில் சேர உதவும் அரசாணி மாற்றி அமைத்து ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்வழி அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணி, அரசு பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு அலுவலர்கள் ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்டத்தின் பலன்கள் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.