பொதுமக்கள் தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் சிவன் கோயில் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கையின்படி அப்பகுதியில் புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் குடிநீர் தொட்டி அமைத்து தரப்பட்டு பல மாதங்களாகியும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீர் வசதி வேண்டி பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தபடி, குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.