யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி ,சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றனர்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ரோம் மைதானத்தில் நடைபெற்ற ‘ ஏ ‘பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி- வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய இத்தாலி அணி வீரர்கள் எதிர் அணியை திணறடித்தனர். இதில் இத்தாலி அணி வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் வேல்ஸ் அணி திணறியது. இறுதியாக இத்தாலி அணி 1-0 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையடுத்து அஜர்பைஜானின் பாகு மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் துருக்கி- சுவிட்சர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆட்டம் தொடங்கிய 6 வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஹாரிஸ் செப்ரோவிக் கோல் அடித்து அசத்தினார். அடுத்ததாக சுவிட்சர்லாந்து வீரர் ஷெர்டன் சர்கியூரி 26 மற்றும் 68 வது நிமிடங்களில் 2 கோல் அடித்து அதிரடி காட்டினார். கடைசி வரை போராடிய துருக்கி அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியாக சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.