நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ஆனி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இக்கோவிலில் தினமும் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கினால் பக்தர்கள் இல்லாமல் பூஜை மற்றும் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது.
எனவே நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு குடம் குடமாக பால் வைத்து அபிஷேகம் செய்துள்ளனர். மேலும் பஞ்சாமிர்தம், எண்ணெய், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருட்களாலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு 1008 வடமாலை சாத்தப்பட்டது. இதற்கு பின்னர் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்துள்ளார். மேலும் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் சிலர் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.