சமையல் செய்து கொண்டிருக்கும் போது தீ பற்றியதால் உடல் கருகி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லலிதாகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிஷாந்தினி என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லலிதா குமாரி தனது மகளுடன் ராஜாவை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சிறுமி நிஷாந்தினியின் ஆடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
அதன்பின் சிறிது நேரத்திலேயே சிறுமியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் நிஷாந்தினி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சதத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நிஷாந்தினி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.