தொழில் தொடங்க ஆலோசனை தருவதாக கூறி தனியார் நிதி நிறுவன மேலாளர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் வசிக்கும் 48 வயது பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தான் கணவரை விட்டுப் பிரிந்து சிங்காநல்லூர் பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து இணையதளத்தில் இந்த பெண் தனது முகவரி மற்றும் செல்போன் எண்ணை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்ததும் சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் வசிக்கும் ஆனந்த் சர்மா என்பவர் இந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை அழைத்து பேசியுள்ளார்.
அதன் பின் ஆனந்த் தான் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணி புரிவதாகவும், இருவரும் சேர்ந்து தொழில் தொடங்கலாம் எனவும் அடிக்கடி இந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வேலை விஷயமாக தான் ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளதாகவும், உடனே அங்கு வந்தால் தொழில் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை அளிப்பதாகவும் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இதனை நம்பி இந்த பெண் அங்கு சென்ற போது ஆனந்த் சர்மா ஆசை வார்த்தைகள் கூறி அவரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின் ஆனந்த் சர்மாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்த இந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவரிடம் விசாரித்த போது ஆனந்த் சர்மா பதிலளிக்காமல் அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்த் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.