ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் உள்ள 181 பவுன் நகைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துகோரக்கி தெருவில் மதன்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அட்சயா (25) சில தினங்களுக்கு முன் மதன்குமார் வீட்டில் இருந்த 85 பவுன் நகைகளையும், அட்சயா பெற்றோர் வீட்டில் இருந்த 96 பவுன் நகைகளையும் எடுத்துக்கொண்டு திடீரென மாயமாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மதன்குமார் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் அட்சயா இரண்டு பெண்கள் மற்றும் சிலரின் தூண்டுதலின் படி வீட்டில் இருந்த நகைகளை எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக்கின் உத்தரவின்படி ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பாண்டியன், கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து மாயமான அட்சயாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அட்சயா கேரளா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் இருந்த அக்ஷராவை அட்சயாவை போலீசார் கைது செய்து ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை அட்சயாவை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ள நிலையில் நிலக்கோட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அட்சயாவை தூண்டியது யார் என்பது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அவர் எடுத்துச்சென்ற 80 லட்சம் மதிப்பிலான 181 பவுன் நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.