ஊருக்குள் புகுந்த கரடி வீட்டின் கதவை தட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொட்டலட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக இந்த கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனையடுத்து அந்த கரடி ஒரு வீட்டின் கதவை தட்டி உள்ளது. இதனை அந்த வீட்டிலுள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
அதன் பின் அந்த கரடி ஆட்கள் இருப்பதை அறிந்து அங்கிருந்து திரும்பி சென்றுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடி வருவதால் வெளியே செல்வதற்கு அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே வனத்துறையினர் கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.