தேனி மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வரும் மழையினால் வாழை மரங்களில் இலைகள் கிழிந்து மிகவும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், கரும்பு, திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. இதற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உப்புக்கோட்டை, கோட்டூர், குச்சனூர், சின்னமனூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு வகையான வாழைகள் என சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக தேனியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வாழை இலைகளின் கிழிசல் ஏற்பட்டு வருகின்றது. மேலும் பலத்த காற்றினால் வாழை மரங்களும் சில சமயங்களில் சரிந்து விழுகின்றது. இதனால் வாழை மரங்களில் குலை தள்ள தாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.