இங்கிலாந்தில் ஆராய்ச்சியாளர்கள், 10 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் காலடி தடத்தை கண்டறிந்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் உள்ள கென்ட் என்ற நகரத்தில் ஃபோல்க்ஸ்டோன் என்ற பகுதியில் மலைக் குன்றுகளிலும் கடற்கரையின் முன்புற பகுதிகளிலும் இந்த காலடித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
டைனோசர்கள் தொடர்பில் ஆராய்ச்சி நடத்தி வரும் பேராசிரியர் டேவிட் மார்டில் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, முதல்முறையாக இப்பகுதியில் டைனோசர்களின் காலடித்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை மொத்தமாக அழிவதற்கு முன்பாக இறுதியாக இந்த பகுதிகளில் சுற்றி திரிந்திருக்கும். அவை ஒன்றோடு ஒன்று நெருங்கி நடந்து சென்றிருக்கிறது.
இந்த காலடித்தடங்கள் மூலம் 10 கோடி வருடங்களுக்கு முன்பாக கிரெட்டேசியஸ் கால இறுதி பகுதியில் இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் பல வகை டைனோசர்கள் இருந்திருப்பது தெரிகிறது. இதில் அசைவத்தை உண்ணக்கூடிய 3 விரல்கள் உடைய டைரன்னோசாரஸ் ரெக்ஸ், பறவைகளின் தோற்றமுடைய சைவ உண்ணிகள், ஆங்கைலோசார்கள் என்ற கவச ஆடை போல வடிவமுடைய டைனோசர்கள் போன்றவை இருந்திருக்கலாம்.
மேலும் யானை காலடித்தடம் போன்று ஒரு சில காலடித்தடங்கள் இருக்கிறது. அது ஆர்னித்தோபோடிக்னஸ் என்ற இனத்தை சேர்ந்ததாக இருக்கும் என்று அடையாளம் கண்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் இகுவானோடன்கள் என்ற வகை டைனோசரின் காலடி தடமும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது 10 மீட்டர் உயரத்தில் இரண்டு அல்லது நான்கு கால்களால் நடக்கக்கூடியது என்றும் சைவம் உண்ணக்கூடிய இந்த டைனோசர் 80 சென்டி மீட்டர் அகலமும் 65 சென்டிமீட்டர் நீளமும் உடையது என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரே பகுதியில் இவ்வளவு வகை டைனோசர்களின் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. உணவை தேடியோ வேறு இடத்திற்கு செல்லவோ இந்த வழியாக டைனோசர்கள் சென்றிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.