பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தீனதயாளன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீனதயாளன் வேலைக்கு செல்வதற்காக தெருவில் இருக்கும் ஒரு பாழடைந்த வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த வீட்டின் சுவர் இடிந்து அவர் மீது விழுந்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஒரு மாதம் கழித்து திரும்பி வருமாறு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தீனதயாளனின் மனைவி செல்வி என்பவர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது கணவரின் இந்த நிலைமைக்கு காரணமான அந்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
இதற்கிடையில் கால் உடைந்து, முதுகுத்தண்டு முறிந்த நிலையில் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த தீனதயாளன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து அறிந்தவுடன் ராயபுரம் சிக்னல் அருகே இருக்கும் சாலையில் தீனதயாளனின் உறவினர்கள் அந்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீனதயாளனின் இறப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.