ஆடுகளை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியில் விவசாயியான மணிகண்ட சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் இரண்டு ஆடுகள் காணாமல் போனதால் அனைத்து இடங்களிலும் மணிகண்ட சாமி அதனை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் ஆடுகள் கிடைக்காததால் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதில் மூன்று பேர் ஆடுகளை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து வடக்கிபாளையம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் சூலூர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பதும், தனது நண்பர்களான முருகன் மற்றும் சரவணன் ஆகியோருடன் இணைந்து ஆடுகளை திருடி சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கார்த்திக்கை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 2 ஆடுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் முருகன் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.