கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்திற்குள் பாய்ந்ததால் தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிதறால் பகுதியில் ராஜேந்திரன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாமினி, ஷாலினி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது இரண்டு மகள்களுடன் ஈத்தாமொழி பகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களது கார் செல்லம் கோணம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அப்போது சாலையில் தாறுமாறாக ஓடிய கார் அருகில் உள்ள குளத்தில் பாய்ந்து விட்டது. இதனால் காரில் இருந்த ராஜேந்திரனும், அவரது மகள்களும் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளனர்.
அதன்பின் காரின் கதவைத் திறந்து நீச்சலடித்து இளைய மகளான ஷாலினி தண்ணீரில் இருந்து வெளியே வந்து விட்டார். ஆனால் ராஜேந்திரன் மற்றும் ஷாமினி ஆகிய இருவரும் காரோடு தண்ணீருக்குள் மூழ்கி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் குளத்துக்குள் இருந்த காரை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் ராஜேந்திரன் மற்றும் ஷாமினியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.