Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தப்பித்து சென்ற போலீஸ்காரர்… அடுத்தடுத்த கொலை வெறி தாக்குதல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு போலீஸ்காரரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் ஸ்ரீ சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுஜி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீதர் என்ற மகனும், ஸ்ரீதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்த சரவணன் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீ சரவணன் கடைக்கு சென்ற போது அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ரஞ்சித் என்பவர் அரிவாளால் சரவணனை வெட்டியுள்ளார்.

அதன்பின் ரஞ்சித்தை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சரவணன் தனது நண்பரான விக்ரம் என்பவருடன் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்ற சரவணன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது அங்கே மறைந்து நின்ற ரஞ்சித் அரிவாளால் சரவணனை மீண்டும் சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது விக்ரம் அதனை தடுத்ததால் விக்ரம் மீதும் வெட்டு விழுந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சரவணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஒரு பெண்ணிடம் ரஞ்சித் தவறாக நடக்க முயற்சி செய்த போது ஸ்ரீ சரவணன் அதனை தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு ரஞ்சித் ஸ்ரீ சரவணனை வெட்டி கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ரஞ்சித்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |