அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து உள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்து டாஸ்மார்க், சலூன் போன்ற கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு குறையாத நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி சென்று விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் படி காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சென்ற சிலர் இங்கிருந்து இரண்டு மையில் தூரத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். அதன் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அந்த தேயிலை தோட்டத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் புஷ்ப அருண் மற்றும் பிரபாகரன் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் கர்நாடகா மாநிலத்திருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து தேயிலை தோட்டத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபர்கள் பதுக்கி வைத்திருந்த 176 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்களை கடத்திச் சென்று விற்பனை செய்த குற்றத்திற்காக புஷ்ப அருண் மற்றும் பிரபாகரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.