தேனி மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள சி.எம்.எஸ் நகரில் திருநாவுக்கரசு(35), அவருடைய மனைவி ஜோதிமணி(28) மற்றும் ஜீவிதா(5) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்துவருகின்றார். இதனையடுத்து முழு நேரமும் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஆங்கூர்பாளையத்தில் உள்ள டி.டி.வி தினகரன் நகரில் மகளிர் குழு மூலம் நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தையும் நிர்வகித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து திருநாவுக்கரசர் நேற்று இரவு அந்த கட்டண கழிப்பிடம் அருகில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
அதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த திருநாவுக்கரசரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் துணை சூப்பிரண்டு அதிகாரி உமாதேவியும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று திருநாவுக்கரசரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இதனையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் டிடிவி நகரை சேர்ந்த கார்த்திக், பிரகாஷ் ஆகிய இருவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை உடனடியாக கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் கொலைக்கான காரணத்தையும் கொலை செய்தது யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.