சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள இலுப்பைக்குளம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் 17 வயதுடைய பெண்ணை காதலித்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் தஞ்சையிலே வாடகைக்கு வீடு எடுத்து அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தஞ்சை மாவட்டத்திற்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கள்ளிக்குடிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் நாகராஜ் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நாகராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.