சட்டத்திற்கு விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்ற போலீஸ்காரரை தாக்கிய மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனிப்படை குற்றத் தடுப்புப் பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அக்கரைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அல்லபடுவதாக போலீஸ்காரர் ராஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர் இதுகுறித்து விசாரிப்பதற்காக தன்னுடைய காரில் அக்கரைப்பற்று சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் பெருமாள், ஜான்கென்னடி, தங்கபாண்டி, கட்டகருப்பு, சேகர், ஜோசப்ராஜன், ராஜகுரு, கந்தவேல், பெண்ணி, தங்கப்பாண்டி ஆகியோர் அனைவரும் சேர்ந்து கொண்டு தங்களுடைய டிராக்டர் மற்றும் லாரியுடன் ராஜாவின் காரை சுற்றி வளைத்து அவரை மிரட்டியுள்ளனர். மேலும் ராஜாவை இரும்பு கம்பியால் தாக்கியும் விறகு கட்டையால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதில் அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பெருமாள், தங்கப்பாண்டி, ஜான்கென்னடி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள், டிராக்டர் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 7 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.