நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பொது பிரிவு என அனைத்து பிடிவுகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ உபகரணங்கள் குறித்தும் அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டு அறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரத்த வங்கியில் நடைபெறும் பணிகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
மேலும் கொரோனா கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சை பெரும் நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் சிகிச்சை முறையில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் நோயாளிகளுக்கு சத்தான உணவுகளை அளித்து சிறப்பான சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வில் திருச்செங்கோடு வருவாய் உதவி ஆய்வாளர் இளவரசி, மருத்துவ அலுவலர் தேன்மொழி, தடுப்பூசி பிரிவு டாக்டர் மேகனா பானு மற்றும் கொரோனா சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சத்ய பானு ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.