நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் எதிரே வந்த மொபட் மீது மோதியல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் மோகன்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் போர்வெல் மோட்டார் பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை இருசக்கர வாகனம் மூலம் வேலை முடித்து விட்டு மோகன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து எருமைப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும்போது சிங்களம் கோம்பை பகுதியை சேர்ந்த அமிர்தவல்லி என்பவர் மொபட்டில் எதிரே வந்துள்ளார்.
அப்போது எருமைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வைத்து எதிர்பாராதவிதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அமிர்தவல்லி உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.