சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் எடுக்கும் வசதி உள்ள ஏடிஎம்மில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் எடுத்த பிறகு ஷட்டரை 20 நொடிகள் பிடித்துக்கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகிவிடும். இதை பயன்படுத்தி நபர் ஒருவர் ஷட்டரை கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா ரூ.10,000 என எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளார்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்களில் பணம் எடுக்க தற்காலிக தடை விதித்து வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் பிடிபடுவார்கள் எனவும், சென்னையில் பல இடங்களில் திருடியதில் ரூ.48 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் மேலும் ஒரு எஸ்.பி.ஐ. ATMல் 190 முறை ATM கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொள்ளை தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.