மடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய முயன்ற போது ஊழியர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுருள கோடு செல்லம் துருத்தி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொதுப்பணித்துறையில் நீர்வள ஆய்வாளராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பண்ணைவிளை மடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக மடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் ராஜேந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த மடையில் பெரிய கல் சிக்கி இருந்ததை பார்த்துள்ளார். இதனையடுத்து கால்வாய் தண்ணீரில் மூழ்கி சிக்கியிருந்த அந்த கல்லை ராஜேந்திரன் அகற்றியுள்ளார்.
அப்போது தண்ணீர் வேகமாக வந்ததால் ராஜேந்திரன் வெளியே வர இயலாமல் தண்ணீருக்குள் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் சக ஊழியர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய ராஜேந்திரனை சடலமாக மீட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.