பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 1,364,239-ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 23 ஆயிரத்து 749 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தரவுகளை பதிவு செய்துள்ளது. மேலும் 110 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் இந்த வருடத்திற்குள் ஏழு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 21 லட்சம் பேருக்கு இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டிற்கு பேரழிவை தர வாய்ப்புள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள விருப்பமில்லாதவர்கள் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி அமெரிக்கா அல்லது இந்தியாவிற்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவ நெருக்கடியில் நாடு தவித்து வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் அரசின் ஆலோசனையை கேட்க மறுப்பது எரிச்சலை ஏற்படுத்துவதாகவும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்க நேரிடும் என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த மூன்று மடங்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிபர் எச்சரித்துள்ளார்.