இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை என்றால் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாது. ஜூன் மாத ஊதியத்தை வழங்கும்போது அரசு ஊழியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட தகவல்களை மாவட்ட கருவூல ஆட்சியர் சேகரித்து வைக்க வேண்டும். தினக் கூலிகள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட தகவல்களை துறை தலைவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் கொரோனா மரணங்களை ஆராயும் போது அவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஆஷிஷ் சிங், மாவட்டத்தில் 100 சதவிகித தடுப்பூசி இலக்கை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.