அமெரிக்காவில் இரு சகோதரர்கள் சேர்ந்து 2,800 அடி தூரம் அந்தரத்தில் நடை பயணம் செய்து அசத்தியுள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர்களும், ரோப் டெக்னிசியன்ஸ் என்றழைக்கப்படும் கயிற்றை லாபகரமாக பயன்படுத்துவதில் கைதேர்ந்த நிபுணர்களுமான மென்டோரூபியா மற்றும் மோசஸ் ஆகிய இரு சகோதரர்களுக்கும் கலிபோர்னியா நகரம் மற்றும் யோஸ்மைட் தேசிய பூங்கா இடையே உள்ள மிகப்பெரிய மலை முகட்டை கயிற்றின் மூலம் கடக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருந்துள்ளது. அதற்காக அந்த சகோதரர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக பல பயிற்சிகளை மேற்கொண்டதோடு, காற்றின் வேகம், நில அமைப்பு ஆகியவை குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து பார்த்துள்ளனர்.
மேலும் அவர்கள் அந்த மலை முகட்டிற்கு சென்று தேவையான பொருள்கள் மற்றும் மலை முகட்டை கடப்பதற்கான பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் யோஸ்மைட் தேசிய பூங்காவின் டட் பாயிண்ட் பகுதிக்கு 15 நண்பர்களின் உதவியுடன் சென்று 2,800 அடி நீளம் கொண்ட அந்த மலை முகட்டை கடந்துள்ளனர். இதற்கிடையே மோசஸ், “கலிபோர்னியா நகரத்துக்கும், யோஸ்மைட் தேசிய பூங்காவுக்கும் இடையே உள்ள மலை முகட்டை கடக்க வேண்டும் என்ற ஆசை தங்கள் இருவருக்கும் பலவருடங்களாக இருந்ததாகவும், அதற்கான பல ஆய்வுகளையும் மேற்கொண்ட பிறகே நண்பர்களின் உதவியுடன் கண்காணிப்பதற்கு டெக்னாலஜியை பயன்படுத்தி 2,800 அடி நீளம் கொண்ட அந்த மலை முகட்டை பல நாட்களாக மேற்கொண்ட பயிற்சியின் மூலம் கடந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மோசஸ்-ன் சகோதரர் மென்டோரூபியா “தாங்கள் பயணித்த பாதை சிக்கலான ஒன்றாக இருந்ததாகவும், நடை பயணம் செய்யும் போது காற்றின் வேகம் அங்கு அதிகளவில் இருந்ததாகவும் அனைத்தையும் சமாளித்த பிறகே இலக்கை அடைந்துள்ளோம்” என்று கூறியுள்ளார். இந்த சாதனையானது தங்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.