இங்கிலாந்து ஐகோர்ட்டு நிரவ் மோடி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டிற்கான கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனாக வாங்கி விட்டு இங்கிலாந்திற்கு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தலை மறைவாக இருந்த நீரவ் மோடியை இந்திய அரசின் தொடர் நெருக்கடியால் ஸ்காட்லாந்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அதன்பிறகு அமலாக்கத் துறையும், சிபிஐயும் அவரை மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதற்காக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் பிப்ரவரி மாதம் நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேல், நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு ஏப்ரல் 15-ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் பிரிட்டன் ஐகோர்ட்டில் நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய அனுமதி வேண்டி நீரவ் மோடி மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால் ஐகோர்ட் அதனை ஏற்க மறுத்து விட்டது. இருப்பினும் அந்தக் கோரிக்கையை ஐகோர்ட்டில் நிரவ் மோடியின் வழக்கறிஞர்கள் வாய்மொழியாக வைக்கலாம். நீரவ் மோடிக்கு இங்கிலாந்தின் ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் உத்தரவு பின்னடைவான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.