மூதாட்டி தனது குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் பகுதியில் 77 வயதுடைய சரஸ்வதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரமேஷ் மற்றும் பூபாலன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மளிகை மற்றும் அடகு கடைகளை சொந்தமாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மூதாட்டி தனது குடும்பத்துடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பு திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். அதில் சரஸ்வதி காவல்துறையினரிடம் பல ஆண்டுகளாக தனது மகன்கள் இருவரும் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கடைகளை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த கடைகளுக்கு உரிய வாடகையை தவறாமல் கோவில் நிர்வாகியிடம் செலுத்தி வந்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த ஒரு நிர்வாகி கடைக்கு சென்று இந்த மாதத்தில் இருந்து கடை வாடகை உயர்த்தி விட்டோம் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு தனது மகன்கள் தற்போது கொரோனா தொற்றினால் அனைத்து தொழில்களும் செயல்படமால் இருப்பதால், இவ்வாறு வாடகையை உயர்த்தி கேட்பது நியாயமா என்று கேட்டு எங்களால் இப்போது செலுத்த முடியவில்லை பிறகு தருகிறோம் என்று தெரிவித்தனர். அதற்கு அந்த கோவில் நிர்வாகி நீங்கள் இப்போது வாடகை தர முடியவில்லை என்றால் இங்கு கடையை உங்களால் நடத்த முடியாது என்று கூறி அவர்களை வெளியேற்றி விட்டு கடைகளுக்கு உடனடியாக பூட்டி விட்டு சென்று விட்டார்.
அதன் பிறகு கோவில் நிர்வாகி திடீரென பொக்லைன் எந்திரத்தை கொண்டு சென்று அந்த இரு கடைகளையும் இடித்து தள்ளி விட்டார். இதனால் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டது என தெரிவித்துள்ளார். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாங்கள் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தவித்து வருகிறோம் என மிகுந்த வேதனையுடன் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த கோவில் நிர்வாகியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி கூற வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.