அணுமின் நிலைய பயிற்சி விஞ்ஞானி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இருக்கும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்திய சாய் ராம் என்பவர் பயிற்சி விஞ்ஞானியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் குடியிருப்பு விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலை 5 மணி அளவில் விடுதியில் இருந்து சைக்கிளில் வெளியே சென்ற சத்ய சாய்ராம் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இது குறித்து அவருடன் வேலை பார்க்கும் அவரது நண்பரான சிவ கிருஷ்ணன் என்பவர் சத்ய சாய்ராமின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் கல்பாக்கம் காவல் நிலையத்தில் சத்ய சாய்ராமின் தந்தை பசுமர்தி நாகேஸ்வரராவ் தனது மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சத்திய சாய்ராமை தேடி வந்த நிலையில் கூவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் பிணம் உடல் முழுவதும் எரிந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் இருந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன அணுமின் நிலைய விஞ்ஞானி சத்திய சாய்ராம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.