உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது .
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், நியூசிலாந்து அணி 249 ரன்களும் எடுத்திருந்தது . இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்திருந்த நிலையில், 5 வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இதில் விராட் கோலி 8 ரன்கள், புஜாரா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6 வது நாளில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் கேப்டன் விராட் கோலி 13 ரன்களில் ஆட்டமிழக்க புஜாரா 15 ரன்கள் , ரகானே 15 ரன்கள் மற்றும் ஜடேஜா 16 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
இந்திய அணியில் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி 41 ரன்களை குவித்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 2 வது இன்னிங்ஸில் 170 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி 139 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டாம் லாதம் 9 ரன்களும் , தேவன் கான்வாய் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் – ராஸ் டெய்லர் ஜோடி அதிரடி காட்டியது. இறுதியாக நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தது .