ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம் பகுதியில் இருக்கும் சிவன் கோவில் தெருவில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று மாரியப்பன் மற்றும் அவரின் நண்பரான ஆறுமுகம் இருவரும் பெயிண்டிங் வேலைக்காக பாளயங்கோட்டை பகுதியில் இருக்கும் மகிழ்ச்சி நகருக்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலை முடித்து இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர்களைத் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டும் அவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. மேலும் இருவரின் குடும்பத்தினரும் சுற்றுவட்டார பகுதியில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து காவல் நிலையத்தில் அர்ஜுனன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் மாரியப்பன் மற்றும் ஆறுமுகத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கொண்டாநகரம் கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம் உள்ள வெயிலுகந்தம்மன் கோவில் அருகே மாரியப்பன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக சுத்தமல்லி காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி காவல்துறையினர் விரைந்து சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து முதல்கட்ட விசாரணையில் மாரியப்பன் மீது கொலை, அடிதடி, திருட்டு போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவரது பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவருடன் சென்ற ஆறுமுகத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாரியப்பனின் நண்பர்கள் உட்பட 7 பேர் கொண்ட மர்ம கும்பலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.