தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தான் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இதனை அடுத்து வண்டலூர் பகுதியில் உள்ள பாபா கோயிலுக்கு அருகே இருக்கும் 1 ஏக்கர் 34 சென்ட் நிலம் தமிழக அரசிற்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக 3 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீட்டு செய்துள்ளது. ஆனால் கட்டுமான பணி எதுவும் இதுநாள்வரை தொடங்கப்படவில்லை.
இந்த நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று நிலத்தை ஆய்வு செய்துள்ளார். மேலும் ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஒ, வண்டலூர் தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.