திருச்சியில் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை விமான பயணிகளிடமிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பல்வேறு வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு சிறப்பு மீட்பு விமானங்கள் செயல்பட்டு வருகிறது. இண்டிகோ நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் இந்த விமானங்கள் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்த விமானம் தமிழகத்திலிருந்து காலியாக செல்லும். மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்கம் கடத்தும் கும்பல் இந்த விமானத்தில் வரும் பயணிகளிடம் தங்கத்தை கொடுத்து அனுப்புவது இயல்பான ஒன்றாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று காலை ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானம் ஒன்றில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அந்த விமானத்தில் சோதனை மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 6 பயணிகள் சிக்கியுள்ளனர். அவர்களை விசாரித்ததில் 6,231 கிராம் தங்கம் கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த தங்கம் இந்திய மதிப்பின்படி ரூ. 3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய வருவாய் நுண்ணறிவு துறை சுங்கத்துறை அதிகாரிகள் அந்த தங்கத்தை கடத்தி வந்த 6 பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.