பாகிஸ்தானை சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல்முறையாக காவல் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள் சுமார் 70,00,000 பேர் வசித்து வருகின்றனர். அங்கு குறிப்பாக சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாகாணத்தை சேர்ந்த இந்து பெண்ணான புஷ்பா கோலி என்ற இந்து பெண் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் எழுதி வெற்றி பெற்று காவல் துணைஉதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை மனித உரிமைகள் ஆர்வலர் கபில்தேவ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சிந்து மாகாணத்தில் காவல்துறைக்கு சேரும் முதல் இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். பெண்களுக்கு அதிக அதிகாரம் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் சுமன் பவன் போடானி என்ற இந்துப்பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது புஷ்பா கோலி காவல்துறை அதிகாரியாக தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.