அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பைசரின் தலைமை அதிகாரி இந்திய மக்களுக்கு சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் முதுகெலும்பாக திகழும் என்று கூறியுள்ளார்.
பல நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை வினியோகித்து வரும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பைசரின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டமைப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் 300 கோடி டோஸ் தடுப்பூசி இந்த வருடமும், 400 கோடி டோஸ் தடுப்பூசி அடுத்த வருடமும் உற்பத்தி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் 200 கோடி டோஸ் தடுப்பூசியை குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட நடுத்தர நாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பைசர் தடுப்பூசிக்கு இந்தியாவில் அங்கீகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அதனை விநியோகம் செய்ய முடியும், தற்போது அங்கு தடுப்பூசிக்கான அங்கீகாரத்தைப் பெறும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த பைசர் தடுப்பூசியை இந்தியாவில் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் கூடிய விரைவில் கையெழுத்திடப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகள் முதுகெலும்பாக திகழும் எனவும், அதோடு தங்களது பைசர் தடுப்பூசிகளும் முக்கிய அங்கமாக திகழும் என்று தெரிவித்துள்ளார். இந்தியா கொரோனா பிடியிலிருந்து தற்போது இயல்பான நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் கொரோனா தொற்று பாதிப்பு குறைய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.