இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தபால் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி – ஜோதி தம்பதியினரின் மகன் வேல் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர் விடுமுறை முடிந்ததும் நேற்று காலை வேலைக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் நெய்வேலிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே உள்ள பேட்டைமேடு பகுதி வழியே சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று அடையாளம் தெரியாத லாரி ஒன்று இவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த வேலுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.