நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் மதுபிரியர்கள் திருச்சி மாவட்டத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர். இதனையடுத்து பலரும் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல் துறையினர் மாவட்ட எல்லையில் ஆங்காங்கே சோதனை சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் அருகில் உள்ள திருச்சி செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியாக வந்த ஒரு ஆம்னி வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 67 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஆம்னி வேனையம் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் மது கடந்து வந்த பெரியசாமி மற்றும் மோகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து காட்டுப்புதூர் பகுதியாக வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பட்லூரை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நல்லமுத்து(28) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் 37 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.