7 மாத கர்ப்பிணி பெண் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் திலீபன் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. தற்போது காவியா மீண்டும் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு திலீபன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை அடுத்து திலீபன் இரவு 10 மணி அளவில் தனது 1 1/2 வயது குழந்தையை பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு அவர்களின் செல்போனை வாங்கி உறவினர் யாருக்கோ திலீபன் பேசிய போது அக்கம்பக்கத்தினர் காவியா குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது திலீபன் காவியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திலீபனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவியாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காவியாவின் தந்தை ராஜ்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திலீபனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.